மோட்டாரை ஆன் செய்த போது ஷாக் அடித்து விசைத்தறி அதிபர் சாவுகாப்பாற்ற முயன்ற பெண்ணும் பலி
ஓமலூர்:சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாஷா (38). இவரது மனைவி வர்சனா (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். காதர்பாஷா 5 விசைத்தறிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து காதர் பாஷா விசைத்தறியை ஓட்டுவது வழக்கம். நேற்று இரவு ஓமலூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகாலை வரை விட்டு விட்டு மழை தூறிக் கொண்டே இருந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம் போல் எழுந்த காதர் பாஷா விசைத் தறியை ஓட்டுவதற்காக மின்மோட்டாரின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. அலறல் சத்தம் கேட்டு எழுந்து ஓடி வந்த காதர் பாஷாவின் சித்தி தாராபி (45), அவரை காப்பாற்ற முயன்றார். காதர் பாஷாவின் கையை பிடித்து தாராபி இழுத்த போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.இருவரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இந்நிலையில், காலை 6 மணிக்கு காதர்பாஷாவிடம் தறி ஓட்டும் பஷீர், அங்கு வந்தார். இருவரும் விழுந்து கிடப்பதை பார்த்த அவர், அவர்களை தட்டி எழுப்பினார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. ஆனால் அவர் சுதாரித்து எழுந்து ஓடி தப்பினார். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மக்கள் திரண்டனர். வீட்டின் மெயின் சுவிட்சை ஆப் செய்தனர். இது பற்றி தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.