திருவள்ளூர்:சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் வேலம்மாள் பன்னாட்டு பள்ளியை சேர்ந்த 12 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. இதற்கு பள்ளியின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக இசை பாடகி பாம்பே சகோதரிகள், லலிதா சரோஜா, நாட்டிய சங்கல்பாவின் கலை இயக்குனர் ஊர்மிளா சத்தியநாராயணன், சினிமா நடன கலைஞர் மோகன்வித்யா கலந்து கொண்டனர். வேலம்மாள் பன்னாட்டு பள்ளியின் முதல்வர் கோதண்டராமன் வரவேற்று பேசினார். பள்ளியின் பரதநாட்டிய குரு பிரதீஷ் சிவானந்தன் விழாவில் கவுரவிக்கப்பட்டார். ஸ்வேதா, தீக்ஷி, வர்தினி ரெட்டி, மோனிகா,ஐஸ்வர்யா, லாவண்யா, ஸ்வேதா, ரோஜாஸ்ரீ, தீபிகா, வாசுகி மற்றும் இரட்டை சகோதரிகள் வர்தினி, வினோதினி ஆகியோர் இணைந்து புஷ்பாஞ்சலி, அலாரிப்பூ, கொளத்துவம், ஜத்தீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், தில்லானா மற்றும் மங்கலம் ஆகிய நாட்டியங்கள் ஆடினர். இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.