பங்குனி உத்திர திருவிழா திருவாலங்காடு கோயிலில் நாளை மறுநாள் தேரோட்டம்
திருத்தணி:பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவாலங்காடு சிவன் கோயிலில் நாளை மறுநாள் கமலத் தேர் ஊர்வலம் நடக்கிறது. திருத்தணி அருகே திருவாலங்காட்டில் பிரசித்தி பெற்ற வடாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமானின் ஐந்து சபைகளில் முதல் சபையாக விளங்கும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு கடந்த 4ம் தேதி பங்குனி உத்திர விழா தொடங்கியது. இதையடுத்து, தினமும் வடாரண்யேஸ்வரர் & வண்டார்குழலி அம்மன் வீதியுலா நடந்து வருகிறது.
அன்ன வாகனம், பூத வாகனம், குதிரை வாகனம், பல்லக்கு, சூரியபிரபை, சந்திர பிரபை, நாக வாகனம், மகர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்களில் சாமி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். முக்கிய விழாவான கமலத் தேர் ஊர்வலம் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மனுடன் எழுந்தருள்கிறார். வரும் 14ம் தேதி பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் நடக்கும் தேர் ஊர்வலத்தில் ஏர£ளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.