கோலாம்பூர்:கடலில் விழுந்து மூழ்கிய மலேசிய விமானத்தின் கதவு போன்ற பாகங்கள் ரேடாரில் பதிவாகியுள்ளதாக வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் கோலாம்பூரில் இருந்து நேற்று முன்தினம் சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வியட்நாம் வான் வெளியில் சீனாவின் தெற்கு கடல் பிராந்தியத்தில் திடீரென மாயமானது. இரண்டு நாட்களாகியும் விமானம் என்னவானது என்பது தெரியவில்லை. விபத்தில் சிக்கி நொறுங்கியதற்கான தடயங்களும் இதுவரை கிடைக்காதது மர்மமாக உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, சீனா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 8 நாடுகள், விமானத்தை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் விமானத்தை தேடி வருகின்றனர். இதுகுறித்து வியட்நாம் மீட்பு படை அதிகாரிகள் குழு தலைவர் தவுன் ஹு ஜியா கூறியதாவது:
ரேடாரில் பதிவான தகவல்களை ஆய்வு செய்த போது, விமானத்தின் கதவு போன்ற உதிரி பாகம் ஒன்று பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கடலில் குறிப்பிட்ட அந்த பகுதிக்கு கப்பல்கள் சென்று பார்த்த போது அந்த பாகத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. மேலும், வியட்நாம் வான் வெளியில் பறந்து கொண்டிருந்த விமானம் திரும்பி சென்றது ரேடாரில் பதிவாகி உள்ளது. இது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் தாய்லாந்தில் காணாமல் போன பாஸ்போர்ட்களில் 2 பேர் சென்றது உறுதியாகியுள்ளது. மேலும் 2 பேர் திருட்டு பாஸ்போர்ட்டில் சென்றது குறித்து விசாரணை நடக்கிறது. திருட்டு பாஸ்போர்ட்டில் விமானத்தில் சென்ற 2 பேரும் தற்கொலை படை தீவிரவாதிகளா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 2 பேரின் உருவங்களும் விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.
இவ்வாறு வியட்நாம் மீட்பு படை அதிகாரிகள் குழு தலைவர் தவுன் ஹு ஜியா கூறினார்.இந்த தகவல்களை மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஜாமூதின் ஹூசைனும் உறுதி செய்துள்ளார். விமானம் விழுந்து நொறுங்கியதா? தீவிரவாதிகள் கடத்தி சென்றனரா? அல்லது பைலட்டுகளே விமானத்தை மோதி வெடிக்க செய்து விட்டனரா என்பது மர்மமாக உள்ளது.