முகாமில் மதம் பிடித்த போது கும்கி காலில் கட்டிய சங்கிலியை போராடி அகற்றிய பாகன்கள் காயத்துக்கு தீவிர சிகிச்சை
மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடந்தது. அங்குள்ள விளாமரத்தூரில் வனத்துறை யானைகளுக்கும் புத்துணர்வு முகாம் நடந்தது. இதில் முதுமலை, டாப் சிலிப், கோவை சாடிவயல் ஆகிய பகுதிகளில் இருந்து வனத்துறைக்கு சொந்தமான 18 யானைகள் பங்கேற்றன.
முகாமின்போது சாடிவயல் கும்கி யானைகள் நஞ்சன், பாரிக்கு மதம் பிடித்தது. முகாம் நிறைவு பெறும் போது மதம் அதிகமானதால் தொடர்ந்து முகாமில் வைத்தே அந்த யானைகள் பராமரிக்கப்பட்டன. ஒரு மாதத்துக்கும் மேலாக காலில் சங்கிலியால் கட்டி ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் யானை நஞ்சன் காலில் காயம் ஏற்பட்டது. சங்கிலி அடிக்கடி உரசியதால் காயம் பெரிதானது. பாகன்களை அருகே அனுமதிக்காமல் யானை பிடிவாதம் செய்ததால் சங்கிலியை அகற்ற முடியாமல் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு யானை தூக்கத்தில் இருந்த போது ஆக்ஷா பிளேடால் சங்கிலியை அறுத்து எடுத்தனர். பிறகு முன்னங்காலில் சங்கிலி போட்டு கட்டினர். யானையின் காயத்துக்கு டாக்டர் மனோகரன் சிகிச்சை அளித்தார். தொடர்ந்து யானை அங்கேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. யானை விழித்திருக்கும்போது ஸ்பிரே மூலம் காயம்பட்ட இடத்தில் மருந்து தெளித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.