மதுராந்தகம்:செய்யூரில் நடந்த இலவச மருத்துவ முகாமில் கிராம மக்கள் 2000 பேர் பங்கேற்று பயன் பெற்றனர். மதுராந்தகம் அடுத்த செய்யூரில் உள்ள அரசு மருத்துவமனை சார்பில் அங்குள்ள பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. செய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் சங்கர், டாக்டர் பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மருத்துவ முகாமில் செய்யூர், கடப்பாக்கம், விராலூர், ஓனம்பாக்கம், நல்லூர், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இதயம், எலும்பு, நரம்பு, மூட்டு, தோல், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த முகாமில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, கற்பக விநாயகா மருத்துவமனை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை ஆகியவற்றை சார்ந்த 80க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.