பொள்ளாச்சி:பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஜனவரி 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை கடந்த 12ம் தேதி நள்ளிரவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக குண்டம் இறங்கும் பக்தர்கள் நேற்று முன்தினம் காப்பு கட்டிக்கொண்டனர். பக்தர்கள் வரிசையில் நின்று குண்டம் இறங்க வசதியாக சேத்துமடை ரோட்டில் உள்ள மாசாணியம்மன் திருமண மண்டப வளாகத்தை சீரமைத்து, மூங்கில் தடுப்புசுவர் அமைக்கப்பட்டது.
நேற்று மாலை சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக இரவில் குண்டம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. இரவு சுமார் 10.30 மணியளவில், 15 டன் விறகு பயன்படுத்தி குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டது. பின் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
குண்டம் திருவிழாவை காண கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை பக்தர்கள் உப்பாற்றில் நீராடிவிட்டு குண்டம் இறங்க தயாராயினர். 8.35 மணிக்கு அருளாளி மனோகரன் பூப்பந்து உருட்டிவிட்டு முதலில் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து ஆண்கள் வரிசையாக குண்டம் இறங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தாமோதரன், துணை சபாநாயகர் ஜெயராமன், முத்துக்கருப்பண்ணசாமி எம்எல்ஏ, ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் பங்கேற்றனர். காலை 11 மணி வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர். இங்கு பெண்கள் குண்டம் இறங்க அனுமதியில்லை. விழாவில் பெண்கள் உள்ளிட்ட லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.நாளை இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை, 17ம் தேதி பகல் 11.30க்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜையுடன் குண்டம் திருவிழா நறைவடைகிறது.