பாரில் மது அருந்தி கும்மாளம் ஜெசி ரைடர், பிரேஸ்வெல் சஸ்பெண்ட்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் ஆக்லாந்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் முன்னணி பேட்ஸ்மேன் ஜெசி ரைடர், வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் இடம் பிடித்திருந்தனர். இவர்களுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முந்தைய தினம் ஆக்லாந்தில் உள்ள மது அருந்தும் பாரில் கும்மாளம் அடித்து விட்டு இரவில் நீண்ட நேரம் கழித்து தான் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த 2 வீரர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஏற்கனவே இந்த 2 வீரர்கள் மீதும் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜெசி ரைடர் இதுபோன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சில மாதத்திற்கு முன்னர் பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கதவை அடித்து நொறுக்கியதில் படுகாயம் அடைந்து சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். போதை மருந்து சோதனைக்கு மறுப்பு தெரிவித்ததால் இவர் 6 மாதம் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.