காஞ்சிபுரத்தில் சம்பவம் கேஸ் கசிவு: தீப்பிடித்து மூவர் படுகாயம்
காஞ்சிபுரம்:கேஸ் சிலிண்டர் பற்றவைத்தபோது தீப்பிடித்து கணவன், மனைவி உள்பட மூவர் படுகாயம் அடைந்தனர்.காஞ்சிபுரம் ரெட்டிப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (52). கூலி தொழிலாளி. இவரது மனைவி திலகவதி (46). இவர்களுடன் சீனிவாசன் தாய் கோமளவள்ளி (70) வசிக்கின்றார்.
இன்று காலை எழுந்த கோமளவள்ளி, காபி போட கேஸ் அடுப்பு பற்றவைத்துள்ளார். அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது திடீரென தீப்பிடித்து கோமளவள்ளி உடல் கருகினார். அவரது சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டு இருந்த சீனிவாசன், திலகவதி ஆகியோர் வந்து அவரை மீட்டனர். இதில் அவர்களும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இவர்களது சத்தம் கேட்டும், வீடு முழுவதும் புகை மண்டலம் பரவியிருப்பது பார்த்து பக்கத்து வீட்டினர் ஓடி வந்து பார்த்தனர். சமையல் அறையில் தீக்காயத்துடன் துடித்த மூவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கோமளவள்ளி, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து புகாரின்பேரில், விஷ்ணுகாஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.