அரசு குடோனில் இருந்து 6 கோடி கோதுமை மூட்டைகள் மாயம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
கோசங்காபாத்:மத்திய பிரதேசத்தில் கோசங்காபாத் அரசு குடோனில் இருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள 42 ஆயிரம் குவிண்டால் கோதுமை மூட்டைகள் மாயமாகியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் அரசின் வெவ்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் மீது மற்றவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதே
பகுதியில் 75 லட்சத்து 17 ஆயிரம் குவிண்டால் கோதுமை மூட்டைகள் இங்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. அப்போது விவசாயிகளுக்கு மத்திய பிரதேச அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1500 கொள்முதல் விலை வழங்கியது.மொத்தமாக 74 லட்சத்து 52 ஆயிரம் குவிண்டால் கோதுமை மூட்டைகள் அரசு குடோன்களிலும், தானிய சேகரிப்பு மையங்களிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள 65 ஆயிரம் குவிண்டால் கோதுமையில் 23 ஆயிரம் குவிண்டால் கோதுமை மோசமானவையாக காணப்பட்டதால் அவற்றை நிராகரித்துவிட்டதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது மாயமான 42 ஆயிரம் குவிண்டால் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளர் பட்நாகர் கூறுகையில், மூட்டைகள் காணாமல் போனால் அதற்கு வாணிப கழக அதிகாரியும், சிவில் சப்ளை கார்பரேஷன் ஏஜென்ட்டும்தான் பொறுப்பேற்க வேண்டும். லாரிகளில் எடுத்து செல்லும்போது காணாமல் போயிருந்தால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதைப் பொறுத்து மாநில கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.தற்போது கோதுமை மூட்டைகள் மாயமான விவகாரம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.