ஆளில்லா கிராசிங்கில் ஜீப் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாப பலி
டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற ஜீப் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம பிலாஸ்புர் அருகே உள்ள மட்கெரா கிராமத்தை சேர்ந்த சுர்மித்சிங் (65) தனது மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் என 10 பேருடன் உத்தரகாண்ட மாநிலத்தில் நடைபெறுவதாக இருந்த உறவினரின் திருமணத்துக்கு நேற்று ஜீப்பில் புறப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபுர் அருகே பங்காலி காலனி ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக காத்கோடம்&டெல்லி சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் மிக வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஜீப் மீது ரயில் பயங்கரமாக மோதியது. இதில் ஜீப்பில் இருந்த சுர்மித் சிங் மனைவி, 2 மகன்கள், 2 மருமகள்கள், 2 பேரக்குழந்தைகள் அதே இடத்தில் உயிரிழந்தனர். சுர்மித் சிங் மற்றும் பேரக்குழந்தைகள் ரோகினி (11), பாபி (8) யுவி(5) ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இதில் யுவிக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது. அவனது நிலைமை மிக மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சுர்மித் சிங்கின் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.