போர்க்களத்தில் எதிரியின் நடவடிக்கைக்கு ஏற்ப உடனடியாக செயல்படாவிட்டால், சேதம் அதிகரிக்கும். அதுபோல்தான் சில விஷயங்களில் உடனடியாக பதிலடி தரவேண்டியது மிக அவசியம். வழக்குகளின் விசாரணையை தாமதப்படுத்தும் போது, பயந்து நடுங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளுக்கு தண்டனை பற்றிய அச்சம் இல்லாமல் போய் விடும். இதனால், காலதாமதமாக தண்டனை பெற்று வெளியே வந்தால், அவர்கள் திருந்த வாய்ப்பில்லாமல் போவதுடன், மீண்டும் அது போன்ற குற்றங்களில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சு, தீவிரவாதம் போன்ற கடும் குற்ற வழக்குகளில் உடனடியாக விசாரணை நடத்தி, தண்டனை வழங்க வேண்டும். மேலும், கொடிய தண்டனைக் கைதிகளை, சொந்த மாநிலத்திலேயே சிறை வைப்பதற்கு பதில், வேறு மாநில சிறையில் அடைக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால், மொழி புரியாத நிலையில், தண்டனையை நினைத்து சம்பந்தப்பட்டவர்கள் வருந்தி, திருந்துவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட வழியுள்ளது. உடனடியாக இது நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என்றாலும் கூட, வழக்கு விசாரணைகளையாவது விரைவுபடுத்த வேண்டும். நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 24 ஆயிரம் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் 21 உயர் நீதிமன்றங்களில், 2012 செப்டம்பர் 30 வரையில், 23,792 பாலியல் பலாத்கார வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 2013 டிசம்பர் 31ம் தேதி வரையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, கடத்தல் போன்றவை தொடர்பான 309 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 8,215 பாலியல் பலாத்கார வழக்குகள் பென்டிங்.
உயர் நீதிமன்றங்களிலேயே பாலியல் பலாத்கார வழக்குகள், இந்த அளவுக்கு தேங்கியிருந்தால், விசாரணை நீதிமன்றங்களில் உள்ள நிலுவை கணக்கை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாலியல் பலாத்கார வழக்குகளை முக்கியத்துவம் கொடுத்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும். ஆனால், பலாத்கார வழக்குகளில் துணிச்சலாக புகார் கொடுக்க முன் வரும் பெண்களை, இழிவாக பார்க்கும் நிலைதான் இன்னமும் நீடிப்பதாக பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட பெண்ணிடமே அருவெறுப்பு ஏற்படும் வகையில் பல்வேறு கேள்விகளை காவல்துறையினர் கேட்பதாகவும், இதனாலேயே பலர் புகார் கொடுக்க அஞ்சி, கொடுமைகளை சகித்து கொண்டு விடுகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை மாறினால்தான் புதிய நிர்பயாக்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.