மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விரைவில் பில்லிங் மெஷின் வைக்க முடிவு அதிகாரிகள் தகவல்
கோவை: தமிழகத்தில் 6,824 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது. இந்த மதுபான கடைகளில் தினமும் மதுபான விற்பனை விவரங்கள் சேகரிக்க சேல்ஸ் ரிப்போர்ட்டர், புள்ளி விவர உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இந்த பதவிகளை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. மாநில அளவில் 200 சேல்ஸ் ரிப்போர்ட்டர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிகளை இனிமேல் கடை ஊழியர்களே கவனிப்பார்கள்.
தினமும் விற்பனையான மதுபாட்டில், விற்பனை தொகை விவரங்கள் மாவட்டம் மற்றும் மண்டல அலுவலகத்திற்கு செல்போன் எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பி வைக்கிறார்கள். இந்த விவரங்கள் ஆன்லைன் கம்ப்யூட்டரில் இணைக்கப்படுவதால் ஒரே நாளில் மாநில அளவில் நடைபெற்ற மதுபான விற்பனையை விவரங்களை அதிகாரிகளால் அறிந்து கொள்ள முடிகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை கலால் மண்டலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பில்லிங் மெஷின் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தினமும் மதுபான விற்பனை விவரங்கள் வகை வாரியாக எளிதில் அறிந்து கொள்ள முடியும். மாநில அளவில் அனைத்து கடைகளுக்கும் 2 மாதத்தில் பில்லிங் மெஷின் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெஷின் வந்து விட்டால் எஸ்.எம்.எஸ்சில் தகவல் அனுப்ப அவசியம் இருக்காது’’ என்றனர்.