அரசியல் தலைவர்களுக்கு 2 ஆண்டு படிப்பு தேவை கிரண்பேடி பேச்சு
ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற டிஜிபி கிரண்பேடி பேசியதாவது:நம் நாடு அதிக அளவில் இளைஞர்களைக் கொண்டது. நாட்டின் முன்னேற்றம் மாணவர்களாகிய இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா நாடுகளில் இல்லாத அளவிற்கு நம் நாட்டில்தான் இளைஞர் சக்தி அதிகமுள்ளது. மருத்துவம், விஞ்ஞானம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்குவதால், நம்நாட்டு மாணவர்களின் சக்தியை பிற நாடுகள் எதிர்நோக்கி இருக்கிறது. கம்ப்யூட்டர் துறைகளில் பிறருக்கு முன்னேடியாக உள்ளனர்.
அடிப்படையிலேயே நல்ல குடும்ப மற்றும் உயர்ந்த கலாச்சாரத்தை நம் முன்னோர்கள் நமக்கு தந்துள்ளனர். மாணவர்களாகிய நீங்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் உயர்கல்வி 10ல் ஒருவருக்குத் தான் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி மட்டுமே ஒருவருக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
நம் நாட்டு மாணவர்களுக்கு அரசியல் தெரிவதில்லை. அவர்களுக்கு வரலாறும் தெரிவதில்லை. இன்றைய அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு தலைமைப்பண்பு இல்லை. அவர்களுக்கு அது தேவைப்படுகிறது. தலைவர்களுக்கு தலைமை பண்பை கற்றுக்கொடுப்பதற்கு இரண்டு ஆண்டு கால படிப்பு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு தேசப்பற்றும், தைரியமும் இருந்தால் போதும். இந்த நாடு வெகுவாக முன்னேறும்.
இவ்வாறு கிரண்பேடி பேசினார்.