டெல்லியில் காமன்வெல்த் போட்டியின்போது நடைபெற்ற உள்கட்டமைப்பு பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியின் நிர்வாகத்தையும், காமன்வெல்த் போட்டியின்போது இருந்த நிலையையும் சற்று உன்னிப்பாக கவனித்தால், என்ன நடந்திருக்கலாம் என்பதை ஓரளவு ஊகிக்க முடியும். டெல்லியில் மாநில அரசு என்பது, ஒரு சாதாரண உள்ளாட்சி நிர்வாகத்தை போன்றதுதான். உள்ளாட்சிகளுக்கு கூட அதிக அதிகாரங்கள் உள்ளன. ஆனால், இங்கு நிலைமை வேறு மாதிரி.
போலீஸ் நிர்வாகம் மத்திய அரசின் கையில். ஒரு அரசு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் கூட 12 அமைப்புகளிடம் இருந்து அனுமதியை பெற வேண்டும். குடியிருப்பு பணிகளை கூட அரசு செய்ய முடியாது. அதற்கு, டிடிஏ எனப்படும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு தனியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், காமன்வெல்த் போட்டி என்ற பெருமைமிக்க நிகழ்ச்சியை நடத்த டெல்லி அரசு ஒப்புக்கொண்டது. ஆரம்பத்தில் இதற்கான கட்டமைப்பு பணிகளை டிடிஏதான் மேற்கொண்டது. எல்லா பணிகளும் திட்டமிட்டதைவிட பல மாதங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது, ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு பலமுறை இதுகுறித்து அறிவுறுத்தியபோதும், பணிகள் ஆமை வேகத்தில்தான் நடந்து வந்தன. தொடக்க விழா நிகழ்ச்சிக்கான அரங்கு கூட உரிய நேரத்தில் கட்டி முடிக்கப்படவில்லை.
அதன் பின்னர், மாநில அரசே மத்திய அரசிடம் கேட்டு, இப்பணிகளை தன் வசம் எடுத்து கொண்டு செய்ய ஆரம்பித்தது. அது வரையில் பணிகளில் காணப்பட்ட தொய்வு மாறியது. காமன்வெல்த் போட்டி தொடர்பான பணிகளுக்கு உடனடி அனுமதி வழங்க, ஒருங்கிணைந்த அமைச்சர்கள் குழுவை ஷீலா தீட்சித் நியமித்தார். இதன் மூலம் பணிகளுக்கான அனுமதிகள் அடுத்தடுத்து கிடைத்தன.
விளையாட்டு கிராமத்தில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சற்று கூடுதல் இடத்தை வளைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டாலும், போட்டி நடந்தாக வேண்டும் என்ற நிலையில் அப்பிரச்னையை பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று டிடிஏவை கேட்டுக் கொண்டு அனுமதி கொடுக்க வைத்தார். ஆமையை குதிரை (பரி) வேகத்தில் விரட்டி இலக்கை அடையச் செய்தவர் ஷீலா தீட்சித் என்பதில், டெல்லியில் உள்ள எந்த அரசியல் தலைவரும் ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.
ஊரே பற்றி எரியும்போது, ஓலைகள் கருகுகிறதே என்று பார்த்தால் உயிர்களை காப்பாற்ற முடியாது. அதுபோன்ற நிலையில்தான் சில விதிகளை மீறுகிறோம் என்று தெரிந்தே, டெல்லி மாநில அரசு பணிகளை மேற்கொண்டது.இந்த நிலையில், இப்போதைய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம்தான். அதேசமயம், இது யாரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் அமைந்து விடாமல் இருக்க வேண்டியதும் அவசியம்.