குஜராத் போலி என்கவுன்டர் வழக்கு மோடி நண்பர் அமித்ஷா விடுவிப்பு சிபிஐ முடிவுக்கு பாஜ வரவேற்பு
அலகாபாத்:குஜராத் போலி என்கவுன்டரில் மும்பை பெண் இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த 2 வது குற்றபத்திரிகையில் மோடியின் நண்பரும், அப்போதைய மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்தவருமான அமித்ஷா பெயர் இடம் பெறவில்லை. இதனை பாஜ வரவேற்றுள்ளது.
குஜராத்தில் 2004ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மும்பையை சேர்ந்த இஷ்ரத் ஜகான், ஜாவத் குலாம், அஜ்மத் அலி, ஜீஷன் ஜோகர் ஆகிய 4 பேர் தீவிரவாத தடுப்பு போலீசாரால் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கொல்வதற்காக வந்த லஷ்கர் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கொல்லப்பட்டதாக போலீசாரும், உளவுத்துறையினரும் கூட்டாக அறிவித்தனர். தனது மகள் நிரபராதி என இஷ்ரத் ஜகான் தாய் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து இஷ்ரத் ஜகான் என்கவுன்டர் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அகமதாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து போலீஸ் உயர் அதிகாரிகள் 10 பேரை கைது செய்தது.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றபத்திரிகையில் 7 போலீசார் பெயர் இடம் பெற்றிருந்தது. சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் கைதான மாஜி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது தவிர உளவுத்துறை அதிகாரிகள் சிலருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சிபிஐ நேற்று 2 வது குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் உளவுத்துறை அதிகாரி ராஜேந்திர குமார் மற்றும் அவரின் கீழ் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது. அமித்ஷாவின் பெயர் இடம் பெறவில்லை.
இந்நிலையில் இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்டர் வழக்கிலிருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டிருப்பதை பாஜ வரவேற்றுள்ளது. அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்ட அவதூறு பிரசாரம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. உளவுத்துறை அதிகாரிகளை வழக்கில் சேர்த்திருப்பது தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.