திருவண்ணாமலை மலையில் மூலிகை மரங்கள் எரிந்து நாசம்
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடும் தீபமலையில், நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலானது. திருவண்ணாமலையின் ஆன்மிக பெருமைக்கு சான்றாக அமைந்திருப்பது இங்குள்ள தீபமலை. இறைவனே மலைவடிவாக எழுந்தருளியுள்ள தீபமலையை மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர்.
திருவண்ணாமலை மலையில், சந்தனம், கடுக்கன், நெல்லி, தான்றிக்காய், அவிஞ்சில், புலவு, நரிவிழி, சரக்கொன்றை, இளுப்பை, பரம்பை, வால்சுறா, காட்டுக்குறிஞ்சி, மனல்புலரி, அகில், உறைப்புங்கன், நிலவேம்பு, நீர்மத்தி, ஆடுதோடா என ஏராளமான அரியவகை மூலிகை மரங்கள், மூலிகை செடிகள், கொடிகள் உள்ளன. மேலும் நீலமுக செண்பகம், கருங்கலை, குயில் கீச்சான், கொம்பன் ஆந்தை, புள்ளிப்பருந்து, நீலபஞ்சிட்டான் போன்ற அரியவகை பறவைகள், அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான சிங்கவால் குரங்கு, புள்ளி மான்கள், முள்ளம்பன்றி, எறும்புத்திண்ணி, காட்டுப்பூனை போன்றவைகளும் தீபமலையில் வசிக்கின்றன.
இந்த மலையில் அடிக்கடி நிகழும் திடீர் தீ விபத்தால், ஆயிரக்கணக்கான மரங்கள் கோடை காலத்தில் எரிந்து நாசமாவது தொடர் கதையாகிறது. ஆனால், இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கும் முன்பே, நேற்று மாலை, செட்டிக்குள மேடு, புதுத்தெரு பகுதிக்கு அருகே மலையடிவாரத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. மலையின் அடிவாரத்தில் பற்றிய தீ, மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதனால், பல அடி உயரத்துக்கு கரும்புகையுடன், தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
மலையில் மூலிகை மரங்கள் தீப்பிடித்து எரிந்ததைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், தீத்தடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீத்தடுப்பு பாதை அமைந்துள்ள பகுதிகளில் ஓரளவுக்கு தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீத்தடுப்பு பாதை இல்லாத பகுதிகளில் தீ மேலும் தொடர்ந்து மலையின் மேல்பகுதியை நோக்கி சென்றது. மாலை 5.30 மணியளவில் தொடங்கிய தீயை இரவு 10 மணியளவில் அணைத்தனர்.