‘சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது’ என்று வேடிக்கையாக கிராமங்களில் கூறுவார்கள். அப்படித்தான் பலர், தங்களுக்கு தாங்களே புகையிலை என்ற அரக்கன் மூலம், உயிருக்கு சூனியம் வைத்து கொள்கிறார்கள்.இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சம். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் இதில் 22 சதவீதம். இந்தியாவில், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வரும் 2015ல் 7 லட்சமாக உயரும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்சம் ரூ.3ல் இருந்து ஆரம்பிக்கிறது சிகரெட் விலை. இதுதவிர பீடி, சுருட்டு, பான்பராக், குட்கா என்று புகையிலைப் பொருட்களின் பட்டியல் நீள்கிறது. 2010&11ல் இந்தியாவில் விற்பனையான சிகரெட்களின் எண்ணிக்கை 1114870. எண்ணிப்பார்த்தால் தலை சுற்றத்தான் தோன்றுகிறது. இப்படி ஊதி, ஊதி தள்ளுபவர்கள், ஆளுக்கு ஏற்ப பல்வேறு காரணங்களை கூறினாலும், எதையும் ஏற்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், சுகாதார வசதிக்காக அரசின் செலவினமும் பல ஆயிரம் கோடிகளில் அதிகரிக்கிறது. இந்தியாவில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுத்தால், புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் வரை குறைக்கலாம் என்று புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா கூறியுள்ளார். இதுவும் கவனிக்க வேண்டிய விஷயம். ஆனால், வருவாய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதை முழுமையாக தடை செய்ய எந்த அரசும் முன்வருவதில்லை. எனினும், புகையிலைப் பொருட்கள் விளம்பரத்துக்கு தடை, பொது இடத்தில் ஊதித்தள்ளுபவர்களுக்கு அபராதம், பள்ளிகள், கோயில்கள் அருகே புகையிலைப் பொருட்களை விற்ககூடாது என்ற கட்டுப்பாடுகளை வரவேற்கலாம்.
தமிழகத்தில் 2008ல் ‘கோபா’ புகையிலை
கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், பொது இடத்தில் புகைப்பிடித்தவர்கள், புகையிலை பொருட்கள் விற்பனை விதியை மீறியவர்கள் ஆகியோருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 2008 முதல் 2013 வரை புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறியதாக 97 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.1 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வளவு அபராதம் விதித்தாலும், இன்னமும் கூட மக்களிடம் விழிப்புணர்வு வந்தபாடில்லை. காரணம், சட்டம் அமலுக்கு வந்து 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அபராதம் விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறதே தவிர, குறையவில்லை. எனவே, அபராதம் விதிப்பதை விட, புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு நாள் சேவை செய்ய உத்தரவிட்டால், அங்குள்ள நோயாளிகளின் மனவேதனையை பார்த்து முழுமையாக திருந்துவார்கள்.