தஞ்சை:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வீராண்டிபட்டியை சேர்ந்தவர் கவிதா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தஞ்சை மாவட்டம் வல்லம் அடுத்த வல்லம்புதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து அருகில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
வல்லம்புதூர் அருகே மாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இருவருக்கும் கடந்த 10 மாதங்களாக பழக்கம் இருந்தது. இதில் கவிதா கர்ப்பம் ஆனார். இந்நிலையில், மணி தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப் பதிந்து மணியை கைது செய்து, நேற்று தஞ்சை இளைஞர் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் கார்த்திகா விசாரித்து மணியை தஞ்சை சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி மணி சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.