திருப்பதி கோசாலையில் பயோ காஸ் திட்டம்
திருமலை: திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எம்.ஜி.கோபால், தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சேஷாசல வனப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தேவஸ்தானம் சார்பில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் அனைத்து பணிகள் செய்து வருவதாக கடந்த மாதம் பார்வையிட்ட நாடாளுமன்ற நிலை குழு கமிட்டி பாராட்டியது. மேலும் கமிட்டியினர் தெரிவித்த சில ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழுமலையான் கோயிலில் சுவாமி பூஜைக்காக உள்ள சந்தனம் வருங்காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க 30 ஏக்கரில் சந்தன மரங்கள் வைத்து பராமரிக்கப்படுகிறது.
கடந்த 13 ஆண்டுகளாக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சேவை செய்யும் ஸ்ரீவாரி சேவா தொண்டர்களுக்காக ரூ.70 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. தேவஸ்தானம் சார்பில் உள்ள கோ சாலையில் பயோ காஸ் திட்டம் குறித்து விரைவில் கருத்தரங்கு நடத்தப்படும். இவ்வாறு கோபால் பேசினார்.