விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மண்சோறு சாப்பிட்ட 2 ஆயிரம் பக்தர்கள்
விருத்தாசலம்:விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 2 ஆயிரம் பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள ஜெகமுத்து மாரியம்மன் கோயிலில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு யாத்திரை குழு தலைவர் பாலுகுருசாமி தலைமையில் கடந்த 19ம் தேதி ஏராளமான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனை வேண்டி மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று ஜெகமுத்து மாரியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக விருத்தகீரிஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் கோயில் பிரகாரத்தில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந் தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மண் சோறு சாப்பிட்டது பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.