நாட்டில் நுகர்வோர் பாதுகாப்புக்கென தனி சட்டத்தை 1986ல் நாடாளுமன்றம் இயற்றியது. ஆனாலும், 1990க்கு பின்பே பல மாநிலங்களில் முழு அளவில் நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்படத் துவங்கின. மக்களுக்கும் நுகர்வோர் சட்டத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை பயன்படுத்தும் எண்ணமும் ஏற்பட்டன. தற்போது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை போல் தகவல் உரிமை சட்டமும் மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது என்றால் மிகையாகாது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டாக்டர்கள் உள்பட சில தரப்பினரை கொண்டு வருவதில் உள்ள சர்ச்சை இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே, பல்வேறு சேவைகளிலும் உள்ள குறைபாடுகளுக்கு நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகுவதில் மக்களின் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதை காண முடிகிறது.
சென்னையில் கால் டாக்சி நிறுவனத்தின் மீது ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். முகிலன் என்பவர் ஒரு கால் டாக்சி நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு, அடையாறில் இருந்து சென்ட்ரல் செல்ல கார் அனுப்புமாறு கேட்டுள்ளார். அவருக்கு டாக்சி டிரைவரின் தொடர்பு எண்ணையும், கார் வரும் நேரத்தையும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு கார் வரவில்லை. டிரைவர் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போதும் முறையான பதில் இல்லை. இதனால், வேறு வழியின்றி அவசர, அவசரமாக ஆட்டோ பிடித்து போயிருக்கிறார்.
இதன்பின் அவர், வெகு நேரம் காத்திருந்தும் கார் அனுப்பாத நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு பெற்று தரவேண்டும் என்று கூறி, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், இவரது வாதத்தை ஏற்றுக் கொண்டது. ‘கால்டாக்சிக்காக புக்கிங் செய்து வெகு நேரம் ஆகியும் கார் அனுப்பாமல் இருந்தது மிகப்பெரிய தவறு. மேலும், பாதிக்கப்பட்டவர் தொடர்பு கொண்டும் முறையாக பதில் அளிக்கவில்லை. இது அவர்களது சேவை குறைபாட்டையே காட்டுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட நபருக்கு ஆட்டோ செலவு ரூ.300ம், மன உளைச்சலுக்காக ரூ.5 ஆயிரம் நஷ்ட ஈடாக கால்டாக்சி நிறுவனம் தர வேண்டும்’ என்று தீர்ப்பில் நீதிபதி கூறியிருக்கிறார்.
சரியாக சேவை அளிக்காத எந்த நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர முடியும் என்பதை இந்த வழக்கு சுட்டிக் காட்டுகிறது. மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க வேண்டும்.