போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழா காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் போலீசாருக்கு உதவியாக ஊர்காவல் படை வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். ஆரம்பத்தில் அவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில்தான் இருந்தது. போதுமான போலீசார் இல்லாத நிலையில், ஊர்காவல் படையினரை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
ஐந்து போலீசாருக்கு ஒரு ஊர்காவல் படை வீரர் என்றிருந்த நிலை மாறி, இப்போது, ஐந்து ஊர்காவல் படையினருக்கு ஒரு போலீஸ் என்ற நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. இரவு ரோந்துகளின்போது பெரும்பாலும் போலீசாருடன் இருப்பது, ஊர்காவல் படையினர்தான். இவர்கள் சேவை மனப்பான்மையில் போலீசாருக்கு உதவ வந்தவர்கள். இந்த நினைப்பை மனதில் கொண்டு பணியாற்றிய வரையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், சமீபகாலமாக சென்னையில் ஊர்காவல் படையினரால் அடிக்கடி பிரச்னைகள் எழுகின்றன. இரவு ரோந்து பணியில் ஈடுபடும் ஊர்காவல் படையினர், தடிகளை கொண்டு வாகன ஓட்டிகளை தீவிரவாதிகளைபோல் தடுத்து நிறுத்துவதும், அவர்களிடம் ஒருமையில் பேசுவதும், சர்வாதிகாரிகளின் சிஷ்யர்கள்போல் நடந்து கொள்வதையும் சாதாரண மனிதர்களால் சகிக்க முடியவில்லை.
உச்சக்கட்டமாக, வடபழனியில் பால்காவடி எடுத்து வந்த பக்தர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில், பொது மக்கள் முன்னிலையிலேயே ஊர்காவல் படையினர் அடித்து, உதைத்த செய்தி, பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இதற்கு மாநகர ஆணையர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை.
மனித உரிமை ஆணையம் தன் கடமையை செய்து கொண்டுதான் இருக்கிறதா என்பதும், சந்தேகத்துக்கு உரியதாக மாறியுள்ளது. சாதாரண எறும்பு கூட தன்னை சீண்டுவோரை கடித்து விடுகிறது. அப்படிப்பட்ட நிலையில், பால்காவடி பக்தர்களுடன் வந்த அந்த நபர், தன்னை திருடனைபோல் நினைத்து கேள்வி கேட்டதை சகித்து கொள்ள முடியாமல், ஊர்காவல் படையினரிடம் வாக்குவாதம் செய்ததை எப்படி தவறாக எடுத்து கொள்ள முடியும்? அருகில் இருந்த அனைவரும், ‘அவர் தங்களுடன் வந்தவர்; எந்த சந்தேகமும் தேவையில்லை’ என்று கூறிய பின்னரும், அவரை அடித்து, உதைக்க அனுமதி அளித்தது யார்? அங்கிருந்த போலீஸ் அதிகாரி, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?
சட்டம் ஒழுங்கை யாரும் கையில் எடுத்து கொள்ளக்கூடாது என்று கூறும் போலீசார், ஊர்காவல் படையினர் மட்டும் சட்டத்தை கையில் எடுத்து கொள்ள அனுமதிக்கலாமா? மனைவி, உற்றார், உறவினர் முன்னிலையில் ஒரு ஆண் மகனை அவமானப்படுத்துவதுதான் போலீசாரின் வீரமா என்ற கேள்வியில் நியாயம் உள்ளது.