தனுஷ் அண்ணன் இயக்கத்தில் சிம்பு
சென்னை:தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார்.தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்‘, ‘புதுப்பேட்டை‘, ‘7ஜி ரெயின்போ காலனி‘, ‘மயக்கம் என்ன‘ போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் அடுத்து கார்த்தி, ஆர்யா போன்ற ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கினார். ஆனால் தனுஷின் போட்டி நடிகரான சிம்புவை வைத்து படம் இயக்கியதில்லை. தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறார் செல்வராகவன். முதன் முறையாக சிம்புவும், செல்வராகவனும் புதிய படம் மூலம் இணைகின்றனர்.
இதுபற்றி இயக்குனர் தரப்பில் கூறும்போது, ‘செல்வாவும், சிம்புவும் சமீபத்தில் பேசினார்கள். அப்போது புதிய படத்தில் இணைவதுபற்றி முடிவு செய்தனர். ஆனால் இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஆகவில்லை. மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றியும் முடிவாகவில்லை. சிம்பு நடிக்கும் படத்துக்கான ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியில் செல்வராகவன் மும்முரமாக இருக்கிறார். பட அறிவிப்பு வெளியிட்டு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்க இருவரும் முடிவு செய்துள்ளனர்’ என்றனர்.