முதியவர் தலைக்குள் புகுந்த 150 புழுக்கள் அகற்றப்பட்டன
தஞ்சை:திருவாரூர் மாவட்டம் கொரக்கால்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(75). கடந்த நவம்பர் 21ம் தேதி வீட்டில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்ததில் மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. சிகிச்சை பெறவில்லை.
மூக்கு உடைந்த இடத்தில் காயம் ஆறாததால் மாரியப்பனுக்கு முகம் வீங்கியது. இதையடுத்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் கடந்த 29ம் தேதி தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காது, மூக்கு, தொண்டை நிபுணர் மணிமாறன் பரிசோதித்தபோது, அவரது முகத்தின் உள்ளே புகுந்து தலை பாகம் வரை புழுக்கள் ஊடுருவி சென்றிருப்பது தெரியவந்தது.
மாரியப்பனுக்கு மயக்கமருந்து செலுத்தி எக்டோஸ்கோபி மூலம் 3 நாளில் மொத்தம் 150க்கும் மேற்பட்ட புழுக்கள் எடுக்கப்பட்டன.
டாக்டர் மணிமாறன் கூறும்போது, ‘‘மாரியப்பனின் இடதுபுற மூக்கில் காயம் ஏற்பட்டதால் ஈக்கள் மொய்த்து ஓட்டை போட்டுவிட்டது. இவை இட்ட முட்டைகள் புழுக்களாக மாறி சதையை தின்று அரித்து கொண்டே தலைக்கு சென்றுவிட்டது. முகம் வீங்கிய பின்னர்தான் அவர் மருத்துவமனைக்கு வந்தார். இப்படியே விட்டிருந்தால் மூளை வரை சென்று உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். சாதாரணமாக மூக்கை சுகாதாரமாக வைத்து கொண்டால் இதுபோன்ற பிரச்னைகள் வராது’’ என்றார்.