சேலம்:ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 29ம் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதிநாளான இன்று காலை 10 மணிக்கு ஏற்காடு கோலாத்துகோம்பை பகுதியில் ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசியது:
ஜெயலலிதா முதல்வர் ஆகி 3 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், மக்கள் பிரச்னைகள் எதுவும் இன்னும் தீர்ந்தபாடில்லை. அமைச்சர்கள் அனைவரும் கோட்டையை காலி செய்துவிட்டு இங்கு வந்து முகாமிட்டுள்ளனர். ஓட்டுக்காக நோட்டை அள்ளி வீசுகின்றனர். ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 நாள் உள்ளது. அதனால், இனி ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் கூட வரும். இது உங்கள் வரிப்பணம்தான். பணம் மட்டுமின்றி வேட்டி, சேலை, காமாட்சி விளக்கு ஆகியவையும் கொடுத்துள்ளனர். காமாட்சி விளக்கை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஏனென்றால், மாலை 5 மணிக்கு பிறகு கரன்ட் கட் ஆகும்போது அது உபயோகப்படும்.
1980ம் ஆண்டு வன்னியர் சங்கம் இட ஒதுக்கீட்டுக்காக போராடியது. அவர்களின் கோரிக்கைக்கு அதிமுக செவிசாய்க்கவில்லை. 1989ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றபிறகு, வன்னியர் சங்க தலைவர்களை அழைத்து பேசி வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தந்தார். பல்வேறு பிரச்னைகளுக்காக வன்னியர்கள் போராடி சிறை சென்றார்கள். பலர் உயிர் தியாகம் செய்தனர். 1996ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், 42 ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து கையெழுத்து போட்டார். வன்னியர்களுக்காக பென்ஷன், நல வாரியம் அமைத்து தந்தது திமுக அரசு. ஆனால், ஜெயலலிதா அந்த நலவாரியத்தை முடக்கினார்.
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதை விட்டு மறையாதவர் வீரபாண்டி ஆறுமுகம். ஜெயலலிதா அவர் மீது பொய் வழக்கு போட்டும், குண்டர் சட்டத்தில் கைது செய்தும் சிறையில் அடைத்தார். குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு என உயர்நீதிமன்றம் கூறியது. ஆனாலும், சிறையில் இருந்து வெளியில் வராத அளவுக்கு அவர் மீது பொய் வழக்கு போட்டு, அதிமுக அரசு சிறையில் வைத்திருந்தது. இதனால், அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து வீரபாண்டியார் சிறையில் இறந்து விடுவார் என்று பயந்த அதிமுக அரசு, அவரை விடுதலை செய்தது. பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், உடல் நலம் தேறி வருவார் என எதிர்பார்த்தோம். துரதிஷ்டவசமாக அவர் மரணமடைந்தார். இதற்கெல்லாம் ஆளுங்கட்சி பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்படியொரு காலம் நிச்சயம் வரும். அதை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
போலீஸ் சோதனை
முன்னதாக ஸ்டாலின் பிரசாரத்துக்கு புறப்பட்டு சென்றபோது, உடையாப்பட்டி செக்போஸ்டில் காலை 9.30 மணிக்கு போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் வேனுக்குள் சோதனை நடத்தினர். அப்போது ஸ்டாலின், ‘நன்றாக சோதனை செய்யுங்கள்‘ என்று கூறி, வேனை விட்டு கீழே இறங்கி நின்றார்.