நடிக்க தெரியாததால் 2 நாளில் ஹீரோயின் நீக்கம்
பெங்களூர்:முன்னாள் மந்திரி மகள் நிஷா நடிக்க வந்தார். நடிப்பு வராததால் படத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டார். கர்நாடக முன்னாள் மந்திரியும் எம்.எல் ஏவுமான சன்னபட்னா சி.பி.யோகேஸ்வர் மகள் நிஷா. இவர் ‘அம்பரிஷ்‘ என்ற கன்னட படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். பட தொடக்க விழாவில் பங்கேற்றதுடன், 2 நாட்கள் ஷூட்டிங்கிலும் பங்கேற்று நடித்தார். இந்நிலையில் அவர் ஷூட்டிங்கிற்கு வராமல் வீட்டிலேயே இருந்துவிட்டார். இதையடுத்து நிஷா படத்திலிருந்து விலகிவிட்டதாக இயக்குனர் தகவல் வெளியிட்டார்.
‘நிஷாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். அவர் வருகைக்காக ஷூட்டிங்கை தள்ளி வைத்தோம். ஆனால் சீனியர் நடிகர்களின் கால்ஷீட் வீணாக்கினால் மீண்டும் கால்ஷீட் பெறுவது கஷ்டம் எனவே நிஷா விலகியதை ஏற்றுக்கொண்டோம். வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய உள்ளோம். நிஷாவுக்கு நடிக்க வராததால் படத்திலிருந்து நீக்கிவிட்டீர்களா என்கிறார்கள். நிஷா நல்ல நடிகை. திரையுலகில் நல்ல இடத்தை பிடிப்பார். உடல்நலன் காரணமாக அவர் ஷூட்டிங்கிற்கு வராமல்போனது எதிர்பாராத விஷயம்‘ என்றார் இயக்குனர்.
நிஷாவின் தாயார் கூறும்போது,‘ஜாகிங் செல்லும்போது நிஷா தவறி விழுந்துவிட்டார். இதில் அவர் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. அடிபட்ட இடத்தில் வீக்கமும் ஏற்பட்டிருக்கிறது. 90 நாட்கள் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் ன்று டாக்டர்கள் கூறி இருப்பதால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார்‘ என்றார்.