சத்தியமங்கலம்: ஈரோடு அருகே தாள வாடி மலைப்பகுதியில் பக்தர்கள் மீது சாணியை வீசும் வினோத திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் பீரேஸ்வரர் கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில், தீபாவளி பண்டிகை முடிந்து 4வது நாள் சாணியடிக்கும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா, நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக, ஊரில் உள்ள எல்லா வீடுகளில் இருந்தும் பசு மாட்டு சாணம் சேகரிக்கப்பட்டு கோயில் அருகே குவிக்கப்பட்டது.
பகல் 12 மணிக்கு சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து விளையாடினர். 2 மணிக்கு அருகே உள்ள குளத்திலிருந்து சுவாமி அழைப்பு நடந்தது. தாரை தப்பட்டைகள் முழங்க, கழுதை மேல் சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பீரேஸ் வரருக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர், ஆண்கள் அனைவரும் சட்டை அணியாமல் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண் டைகளாக செய்து ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். 2 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர்.
சாணி வீசும் திருவிழா குறித்து, ஊர் பெரியவர்கள் கூறியது:
இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒருவர் எடுத்து சென்று சாணங்கள் சேகரிக்கும் குப்பைமேட்டில் எறிந்து விட்டார். ஒரு நாள், மாட்டு வண்டி குப்பைமேட்டின் மீதேறிச் செல்லும் போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. இதை கண்ட மக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது. அப்போது ஒரு சிறுவன் கனவில் தீபாவளி முடிந்து நான்காவது நாள் சாணத்திலிருந்து வந்ததன் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கடவுள் கூறியதால் ஆண்டுதோறும் இத்திருவிழா நடத்தப்படுகிறது. இதில் கும்டாபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள் என்றார்.