பைக்குகள் மீது வேன் மோதல் கோவை மாணவர் உள்பட 2 பேர் பரிதாப பலி
பாலக்காடு:பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே பைக் மீது வேன் மோதியதில் கோவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படிப்பவர் தேஜஸ் (21). சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான பாலக்காடு அருகே உள்ள நாட்டுக்கல் சென்றுள்ளார். விழாவை கொண் டாடி மகிழ்ந்து விட்டு நேற்றுமுன்தினம் நண்பர்கள் 5 பேருடன் 2 பைக்குகளில் வெந்தப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன், பைக்குகள் மீது மோதியது. இதில் ஒரே பைக்கில் சென்ற தேஜஸ், அல்ஜ் (21) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடன் வந்த நிகில், மற்றொரு பைக்கில் வந்த கொழிஞ்சாம்பாறை ஸ்ரீராம், கோழிப்பாறை தீபக், கம்பளிகுன்றம் சிரோஜ் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பாலக்காட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.