இளம்பெண் பலாத்கார கொலை இருவரின் கருணை மனு ஜனாதிபதி நிராகரிப்பு
புதுடெல்லி:கர்நாடக மாநிலத்தில் 18 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இரண்டு பேரின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சிவா மற்றும் ஜடேஸ்வாமி ஆகிய இருவரை கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இருவரும் பெங்களூர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் உறுதி செய்தது. இதை கடந்த 2007ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதை தொடர்ந்து சிவாவின் சார்பாக அவரது தாய் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை நிராகரிக்கும் படி கடந்த ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜிக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் சிவா மற்றும் ஜடேஸ்வாமியின் கருணை மனுவை ஜனாதிபதி நேற்று முன் தினம் நிராகரித்தார். பிரணாப்முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்று 14 மாதங்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் இவர் 11 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.
இவர் நிராகரித்த கருணை மனுக்களில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப், நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல்குரு ஆகியோர் முக்கியமானவர்கள். தற்போது நிராகரிக்கப்பட்ட இருவரின் கருணை மனு தவிர வேறு கருணை மனுக்கள் எதுவும் நிலுவையில் இல்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.