ஆந்திராவில் பரிதாபம் தேசிய கொடி ஏற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி 4 பேர் சாவு
மேடக்:ஆந்திர மாநிலம் மேடக் மற்றும் மெகபூப் நகர் மாவட்டங்களில் தேசியக் கொடி ஏற்ற முயன்ற 4 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.நாடு முழுவதும் நேற்று சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், மாநில தலைநகர்களில் முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினர். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
மெகபூப் நகர் மாவட்டம் வானபர்த்தியில் உள்ள சி.வி.ராமன் பள்ளியில் நேற்று காலை தேசியக் கொடி ஏற்றுவதற்காக கட்டிடத்தின்
3&வது மாடியில் இருந்த கொடி கம்பத்தை உடற்பயிற்சி ஆசிரியர் கிருஷ்ணா நாத் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவன் சரத் ஆகியோர் கீழே கொண்டு வர முயன்றனர். கொடி கம்பம் மிக நீளமாக இருந்ததால் படிக்கட்டு வழியாக கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக கம்பத்தை கீழே போட முயன்றனர். அப்போது மின்கம்பியில் கொடி கம்பம் உராய்ந்தது.
இதில் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் ஆசிரியரும் மாணவரும் பலியாயினர். இதேபோல் மேடக் மாவட்டம் முலுகு மண்டலம் சிங்கணகுடா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவதற்காக கம்பம் நடும் பணியில் பஞ்சாயத்து ஊழியர்கள் மகேஷ் மற்றும் சுரேஷ் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் வயரில் கொடி கம்பம் உரசியது. கம்பத்தை பிடித்துக் கொண்டிருந்த மகேஷ், சுரேஷ் இருவரும் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.