பதவியும் அதிகாரமும் பறிபோகும்போது மனதுக்குள் வேதனை ஏற்படுவது சகஜம்தான். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் துணிவு ஏற்பட வேண்டும். கொலைகாரனாக மாறும் அளவுக்கு கோபம் கண்ணை மறைப்பது, இரு தரப்பினரின் எதிர்காலத்தையும் சீரழித்துவிடும்.சென்னை அண்ணாநகரை சேர்ந்த அருணா, கிண்டி ரேஸ் கோர்ஸ் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த புதன்கிழமை இரவு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது செல்போனில் அழைப்பு வந்ததால், அதில் பேசியபடி வெளியே வந்தார். திடீரென அங்கு வந்த மாஜி வாட்ச்மேன் சோலைமலை (33), கத்தியால் அருணாவின் கழுத்தை அறுத்தார். அலறியபடி ரத்த வெள்ளத்தில் சரிந்த அருணா, அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். தப்பியோடிய சோலைமலையை ரோந்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
‘காரைக்குடியை சேர்ந்த நான், 2001&ல் ரேஸ்கோர்ஸ் அலுவலகத்தில் கிளார்க்காக வேலைக்கு சேர்ந்தேன். பின்னர், செக்யூரிட்டி அதிகாரியாக பணியாற்றினேன். சில மாதங்களுக்கு முன்பு சம்பள பிரச்னையால் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் நிர்வாகத்துக்கு ஆதரவாக சில மாற்றங்களை அருணா செய்தார். தற்காலிக ஊழியர்கள் 108 பேரை டிஸ்மிஸ் செய்தார். செக்யூரிட்டிகள் எல்லோரையும் வேலையை விட்டு நீக்கி விட்டு, அந்த பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். அதிகாரி பதவியில் இருந்து நீக்கி, என்னை சாதாரண செக்யூரிட்டியாக நியமித்தனர். அதிகாரமும், சம்பளமும் பறிபோனதால் விலகிவிட்டேன். சம்பள பாக்கியை கேட்டபோது அருணா தரவில்லை. அவர் மீது கோபம் ஏற்பட்டது. அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, கத்தியுடன் வந்தேன். சம்பவத்தன்று ரேஸ் நடந்ததால் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அவர்களோடு சேர்ந்து உள்ளே சென்றேன். அப்போது கூட்டம் நடந்த அறையில் இருந்து அருணா வெளியே வந்தார். அவரை பார்த்ததும் ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினேன். கழுத்தையும் அறுத்து கொன்றேன்’ என வாக்குமூலத்தில் சோலைமலை கூறியுள்ளார்.
வாழ்க்கை என்பது சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும். அதில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வந்து போகும். ஒரு வேலை போய்விட்டதால் வாழ்க்கையே முடிந்துவிடாது. அடுத்த வேலைக்கு செல்ல முடியாத அளவுக்கு வயதும் கடந்துவிடவில்லை. முயற்சியை தொடங்கியிருந்தால் முன்பிருந்ததைவிட நல்ல வேலை கிடைத்திருக்கும். அதை விட்டுவிட்டு, கோபத்தில் கத்தியை தூக்கியதால் அநியாயமாக ஒரு உயிர் பறிபோனது மட்டுமின்றி, அவரது வாழ்க்கையும் சூன்யமாகிவிட்டது. பொறுமையும் நிதானமும் இருந்திருந்தால் கொலைகாரன் என்ற பழியை சுமக்காமல் இருந்திருக்கலாம்.