பஞ்சம், பட்டினியால் வாடும் வடகொரிய மக்கள் வாழ 601 கோடி வேண்டும் உலக நாடுகளுக்கு ஐநா வேண்டுகோள்
நியூயார்க்:வடகொரியாவில் உணவு, மருத்துவ வசதியின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ ரூ.601 கோடி நிதி தேவைப்படுகிறது. உலக நாடுகள் தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஐநா பொதுச் செய லாளர் பான் கீ மூன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகொரியாவில் 10 ஆண்டுகளாக போதிய சுகாதார வசதி, உணவு, மேம்பாடு இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். அங்கு சரியான வளர்ச்சி இன்றி தவிக்கும் மக்களுக்கு, வெளியில் இருந்து ஏராளமான உதவிகள் தேவைப்படுகின்றன. 2013ம் ஆண்டில் அங்குள்ள மக்களுக்கு உணவு, சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.601 கோடி நிதியுதவி தேவைப்படுகிறது. கடந்த 1990ம் ஆண்டில் இருந்து அங்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக ஏராளமான மக்கள் உணவு மற்றும் போதிய மருத்துவ வசதி இன்றி வாடுகின்றனர். இதனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஐநா சார்பில் பல்வேறு மனிதாபிமான முயற்சிகள் காரணமாக 10 ஆண்டுகளாக அங்கு உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். வடகொரியாவில் 2 கோடியே 40 லட்சம் பேர் போதிய உணவு இன்றி தவிக்கின்றனர். இவற்றில் 20 சதவீதம் பேர் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள். ஊட்டச் சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மனிதாபிமான முறையில் உதவி செய்ய ஐநா உறுப்பு நாடுகள் உதவ வேண்டும்.
இவ்வாறு பான் கீ மூன் கூறியுள்ளார்.