சென்னை:நாளை சுதந்திர தின விழாவில், சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா, தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசுகிறார். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இதற்காக, நாளை காலை கோட்டைக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். பின்னர், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ராமானுஜம் மற்றும் முப்படைகளின் தென்பிராந்திய தளபதிகளை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
அதன்பின் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். சரியாக 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, ஊனமுற்ற சிறுவர்களுக்கு இனிப்புகளையும், சிறந்த தொண்டு ஆற்றியவர்களுக்கு விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார்.
சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு, கோட்டை பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக, கோட்டை பகுதி முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது. இரவு நேரங்களில் கோட்டை பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டல்கள், லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.