புதுக்கோட்டையில் பரபரப்பு அதிமுக நிர்வாகி கடைகளில் விடிய விடிய ஐ.டி. ரெய்டு
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான 3 கடைகளில் நேற்று விடிய விடிய வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜசேகர். அதிமுக மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர். கீழ 2ம் வீதியில் பர்னிச்சர் நிறுவனம் நடத்தி வருகிறார். அதே வீதியில் மெகா ஸ்டோர், பட்டாசு கடைகளும் நடத்தி வருகிறார்.
நேற்று பகல் 12 மணிக்கு இந்த 3 கடைகளிலும் திருச்சியில் இருந்து வந்த 12 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை துவக்கினர். கடையின் ஒருநாள் விற்பனை வருமானம், வருமானத்துக்கு ஏற்ப அரசுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளதா, கடைகளின் ஆவணங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் சென்னை வேளச்சேரியில் உள்ள ராஜசேகரின் ஒரு கடையிலும் நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து நடந்தது. வருமான வரி அதிகாரிகளிடம் கேட்டபோது, இது வழக்கமான சோதனைதான் என்றனர். அதிமுக பிரமுகரின் கடைகளில் விடிய விடிய நடந்த இந்த அதிரடி சோதனை புதுக் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.