தண்டவாளத்தில் அடித்து குழந்தையை கொன்ற வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு
சென்னை:சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சைலா. இவர்களின் மகன் மோனிக் (2). ஆனந்தின் அத்தைக்கு உறவினர் ஜுகுனு (எ) சந்திரகாந்த். இவர் அடிக்கடி ஆனந்த் வீட்டுக்கு வருவார். ஆனந்தின் மனைவியிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2008 செப்டம்பர் 25ம் தேதி ஆனந்தின் வீட்டுக்கு வந்த ஜுகுனு குழந்தை மோனிக்குடன் விளையாடியுள்ளார். அப்போது, சைலாவிடம் தனக்கு ரூ.50 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சைலா இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே சென்றார்.
திருமுல்லைவாயலுக்கும் அம்பத்தூருக்கும் இடையே ரயில் தண்டவாளத்தில் அடித்து குழந்தையை கொலை செய்துவிட்டு தப்பினார். மும்பையில் பதுங்கி இருந்த ஜுகுனுவை போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. 43 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் வரும் 16ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.