பாரிமுனை லாட்ஜில் பதுக்கிய 20 லட்சம் கேட்டமைன் பறிமுதல் 2 பேர் சிக்கினர்
தண்டையார்பேட்டை:பாரிமுனை லாட்ஜில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கேட்டமைன் போதை பொருட்களை போலீசார் நேற்றிரவு பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரிக்கிறார்கள்.
சுதந்திரதினத்தையொட்டி சென்னை, புறநகர் பகுதியில் தீவிர வாகன சோதனை, திருமணம் மண்டபம், லாட்ஜ்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். பாரிமுனையில் உள்ள லாட்ஜில் எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டர் செல்லப்பா, சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ், போலீசார் நேற்றிரவு சோதனை நடத்தினர். அப்போது லாட்ஜ் அறை ஒன்றில் சந்தேகப்படும்படி 2 பேர் தங்கியிருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் அறையை சோதனை செய்தபோது அங்கு 5 கிலோ கேட்டமைன் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம்.
இது தொடர்பாக ராமநாதபுரம் தொண்டியை சேர்ந்த ஷேக் முகமது (26), ஹாஜா (46) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இதில் இருவரும் தொண்டியை சேர்ந்த ரகீம் என்பவருக்கு சப்ளை செய்ய மத்திய பிரதேசம் இந்தூரில் ரகசியமாக கேட்டமைன் வாங்கி ரயிலில் சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. கைதான இருவரும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கிறார்களா என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.