திம்பம் மலையில் லாரி கவிழ்ந்து 12 லட்சம் மீன்கள் நாசம்
சத்தியமங்கலம்:சேலத்தை சேர்ந்த மீன் வியாபாரி அப்துல் ரஹ்மான். இவர் நேற்று இரவு கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சேலத்துக்கு சுமார் 3 டன் மீன்களை விற்பனைக்காக லாரியில் ஏற்றி வந்து கொண்டிருந்தார். லாரியை வேலூரை சேர்ந்த ஹரி ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவர் குமாரும் வந்தார். லாரி திம்பம் மலைப்பாதை வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் லாரி 2வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது பிரேக் பிடிக்காததால் தறிகெட்டு ஓடி மலைப்பாதையில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் ஹரிக்கு காலிலும், குமாருக்கு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மீன் வியாபாரி அப்துல் ரஹ்மான் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான மீன்கள் அனைத்தும் மலைபாதையில் சிதறியது. தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.