தற்கொலையும், கொலை உணர்ச்சியும் கணநேர முட்டாள்தனம். உணர்ச்சி வேகத்தில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல்தான் கொலையும், தற்கொலையும் நடந்து வருகிறது. குடும்ப தகராறை பொருத்தவரை திட்டம் போட்டு யாரும் யாரையும் கொல்வதில்லை. தண்டிக்க வேண்டும் என்ற உணர்ச்சிதான் இருக்கும். ஆனால் படக் கூடாத இடத்தில் பட்டு விடுவதால் கொலையாகி விடுகிறது. கள்ளத் தொடர்பை விட்டுவிடும்படி பலமுறை கூறியும் திருந்தாத மனைவியை அடித்திருக்கிறார் கணவர். அடி தாங்காமல் இவர் இறந்துவிட, இவர் தற்கொலை செய்துவிட்டார்.
திருப்பூர் மாவட்டம் சின்னவீரம்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் சிவராஜ். வேன் டிரைவர். முதல் மனைவி இறந்து விட்டதால் விசாலாட்சி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். விசாலாட்சிக்கு முதல் கணவர் மூலம் 3 குழந்தைகள் உள்ளனர். அவர் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென மாயமானார். இந்நிலையில், சிவராஜ் தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார். உடுமலை போலீசார் சிவராஜின் சடலத்தை மீட்டனர். அவரது சட்டை பையில் இருந்து ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளுக்காக எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தில், ‘விசாலாட்சி வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். பல முறை சொல்லியும் திருந்தவில்லை. சனிக்கிழமை நடந்த தகராறின் போது ஆத்திரத்தில் அடித்ததில் இறந்து விட்டாள். அவளை கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் இறந்து விட்டாள். அவளது உடலை வீட்டின் பின்புறம் உள்ள ஓலைக் குடிசையில் போட்டு மரக்கட்டைகளை மேலே அடுக்கி மறைத்து வைத்துள்ளேன். இருவரது உடலையும் ஒன்றாக எரித்து விடுங்கள்என எழுதியிருந்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார், வீட்டின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த விசாலாட்சியின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக் காதல் விவகாரத்தால் பல குற்றங்கள் நடக்கின்றன. கொலை, தற்கொலை, திருட்டு என பல குற்றங்களுக்கு இதுதான் காரணமாக இருக்கிறது. பின்விளைவு நினைத்துப் பார்க்காமல், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோன்ற நிலைமைதான் ஏற்படுகிறது. கிடைத்த வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ளாமல், குழந்தைகளையும் அனாதையாக்கி விட்டு போய்விட்டார் அந்தப் பெண். கள்ளத் தொடர்பால் ஒரு குடும்பம் சிதைந்துவிட்டது.