மேட்டுப்பாளையம்:ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை வலுத்துள்ளதால், சிறுமுகையில் உற்பத்தியாகும் கைத்தறி பட்டுகளை கொள்முதல் செய்ய ஆந்திர வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் ரூ.20 கோடிக்கும் மேலான பட்டு சேலைகள் தேங்கி உள்ளன.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, மூலத்துறை, பகத்தூர், ஆலாங்கொம்பு உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் கைத்தறிகள் இயங்குகின்றன. இங்கு சுத்த பட்டு, கோரா பட்டு, காட்டன் பட்டு, கோரா காட்டன் பட்டு ஆகிய வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தொழி லில் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் கைத்தறி பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஊர் பட்டு ஆந்திர மாநிலத்துக்கு 60 சதவீதமும், வட மாநிலங்களுக்கு 40 சதவீதமும் ஏற்றுமதியாகிறது.
பட்டு நூல் வரிவிதிப்பு 5ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநில வியாபாரிகளை மட்டும் நம்பி உள்ளூர் நெசவாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் தனி தெலங்கானா பிரச்னை வலுவடைந்துள்ளது. இதையடுத்து அந்த மாநில வியாபாரிகள் மேட்டுப்பாளையம் பகுதிக்கு பட்டு கொள்முதல் செய்ய வருவது முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால் புதிய ஆர்டர் கிடைக்காமல் நெசவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சிறுமுகை பட்டு சேலை வியாபாரிகள் சங்க தலைவர் முத்துசாமி கூறுகையில்,தெலங்கானா பிரச்னையால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.20 கோடிக்கும் மேலான பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளன. புதிய சேலைகள் உற்பத்தி செய்ய ஆர்டர் கிடைக்கவில்லை. நெசவாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்றார்.