புதையல் இருப்பதாக நம்பி வீட்டில் 30 அடி தோண்டிய ஓனருக்கு போலீஸ் எச்சரிக்கை
சித்தூர்:புதையல் இருப்பதாக மந்திரவாதி சொன்னதால், வீட்டில் 30 அடி பள்ளம் தோண்டிய உரிமையாளரை போலீசார் எச்சரித்தனர்.
சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு 2 உள்ளன. இந்த வீட்டில் சிலர் வாடகைக்கு தங்கியுள்ளனர். அவர்களிடம் வெங்கடேஸ்வரலு, தனது வீட்டை புதுப்பிக்க வேண்டும் என சில நாட்களாக கூறி வந்துள்ளார். ஆனால் நள்ளிரவு நேரங்களில் பூஜை நடைபெற்றதால் வாடகைதாரர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து வி.கோட்டா போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கொடுத்தனர்.
அதன்படி வெங்கடேஸ்வரலு வீட்டுக்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்ததில் வீட்டுக்குள் 30 அடி பள்ளம் தோண்டியிருப்பது தெரிய வந்தது. மேலும் பூஜை செய்ததற்கான அடையாளமும் இருந்துள்ளது. இதுகுறித்து வெங்கடேஸ்வரலுவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, வீட்டுக்குள் புதையல் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறினார். அதனால் பள்ளம் தோண்டினேன் என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து சில அடி ஆழம் தோண்டி இருந்தால் கட்டிடத்தின் அஸ்திவாரம் வலுவிழந்து 2 அடுக்கு மாடி வீடு இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.