வித்தை காட்டுபவரிடம் இருந்து அரிய வகை குரங்கு மீட்பு
அரக்கோணம்:அரக்கோணத்தில் வித்தை காட்டுபவரிடம் இருந்து அரிய வகை குரங்கை போலீசார் மீட்டனர்.அரக்கோணம் பஸ் நிலையம் மற்றும் பஜார் பகுதியில் வெளிமாநில வாலிபர் ஒருவர் நேற்று மாலை அரிய வகை குரங்கை வைத்து வித்தைக் காட்டிக் கொண்டிருந்தார். தான் சொல்வதை கேட்காத போது, குரங்கை அடித்து துன்புறுத்தினார். குரங்கை பார்க்க கூடிய மக்கள் கூட்டம் சில்லரைகளை போட்டு விட்டு அங்கிருந்து சென்றனர்.
குரங்கு படும் சித்ரவதையை பார்த்த சமூக ஆர்வலர்கள் சிலர் இதுகுறித்து அரக்கோணம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த இளைஞரிடம் இருந்து குரங்கை மீட்டனர். மேலும் வித்தைக் காட்டிய நபரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் கர்நாடக மாநிலம் ஹூக்ளியை சேர்ந்த செம்மையா என்பது தெரியவந்தது.
மீட்கப்பட்ட குரங்கு லங்கூர் எனும் அரிய வகையை சேர்ந்ததாகும். செம்மையாவுக்கு குரங்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட அரிய வகை குரங்கை வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். குரங்கை காட்டில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.