திருவனந்தபுரம்:சோலார் பேனல் மோசடிக்கு பொறுப்பேற்று, முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக கோரி திருவனந்தபுரத்தில் இடது முன்னணியினர் இன்று தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்தது.
கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி தொடர்பாக முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் அடுத்தகட்டமாக இடது முன்னணி சார்பில் இன்று தலைமை செயலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க நேற்று மாலை முதலே கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட தொடங்கினர். இன்று காலை 7 மணிக்குள் தலைமை செயலகத்தின் 3 நுழைவு வாயில்கள் முன்பும் தொண்டர்கள் திரண்டனர். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலக ஊழியர்கள் செல்வதற்காக, கன்டோன்மென்ட் நுழைவு வாயிலில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.
இன்று காலை 6.30 மணி அளவில் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் அமைச்சர்கள் இந்த நுழைவு வாயிலின் வழியாக பலத்த பாதுகாப்புடன் உள்ளே சென்றனர். தொடர்ந்து உம்மன்சாண்டி தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. காலை 11 மணி அளவில் அகில இந்திய மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், முன்னாள் பிரதமர் தேவகவுடா, சிபிஐ அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்தனர். கேரள மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பினராய் விஜயன், இந்திய கம்யூ. மாநில பொதுச் செயலாளர் பன்னியன் ரவீந்திரன் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
கன்டோன்மென்ட் நுழைவு வாயில் அருகே தொண்டர்களை போலீசார் தடுத்ததால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் நடத்தினர். தலைமை செயலகத்தை சுற்றிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தை முன்னிட்டு, திருவனந்தபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அசம்பாவிதத்தை தடுக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.