சென்னை:சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை, சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை என மொத்தம் 45 கிமீ தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் 24 கிமீ தூரம் சுரங்கப்பாதையில் ரயில் செல்கிறது. சுரங்கப்பாதையில் மட்டும் 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பூமிக்கு அடியில் ரயில் பாதை அமைக்க சுரங்கம் தோண்டும் பணி சென்னையில் முதலாவதாக நேரு பூங்காவில் 2012ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 11 டனல் போரிங் மிஷின் மூலம் பூமிக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி நேரு பூங்கா, வண்ணாரப்பேட்டை, மே தின பூங்கா, சைதாப்பேட்டை, ஷெனாய்நகர் பகுதியில் முழு வேகத்தில் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. சுரங்கத்தில் இரு வழித்தடங்களில் தனித்தனியாக ரயில் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. ரயில் நிலையத்தில் மட்டும் இரண்டு ரயில்களும் சந்திக்கும். மற்ற இடங்களில் ஒரு ரயிலுக்கும் அடுத்த பாதையில் செல்லும் ரயிலுக்கும் சுமார் 15 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் தனித்தனி சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் பணி துவங்கி தற்போது ஒரு ஆண்டு முடிவடைகிறது. இந்த ஒரு ஆண்டில் மெட்ரோ ரயில் செல்வதற்காக 6,500 மீட்டர் அதாவது 6.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது.நேரு பூங்கா & எழும்பூர் இடையே 948 மீட்டர் தூரம் சுரங்கம் தோண்ட வேண்டும். நேற்றுவரை இந்த பாதையில் 50 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. அதேநேரம் வண்ணாரப்பேட்டை & எழும்பூர் இடையே பணி துவங்கிய 6 மாதத்தில் சுமார் 1,500 மீட்டர் பணி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.