ஐநா பொது செயலாளர் பான் கீ மூன் பாகிஸ்தான் பயணம்
இஸ்லாமாபாத்: ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் 2 நாள் சுற்றுப் பயணமாக பாகிஸ்தான் செல்கிறார். பாகிஸ்தானில் ஐ.நா சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க, ஐ.நா சார்பில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து வருகின்றனர். ஆனால், போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் ஊழியர்கள் போல் ராணுவத்தினர் வந்து உளவு பார்ப்பதாக தீவிரவாதிகள் சந்தேகப்படுகின்றனர். இதனால் போலியோ தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சில இடங்களில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பழங்குடியினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களை அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், தீவிர போலியோ தடுப்பு குறித்து ஐ.நா சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் அரசோடு பேச்சு வார்த்தை நடத்த பான் கீ மூன் செல்கிறார். மேலும் பெண் கல்வி, குழந்தைகளின் பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இத்தகவலை பாகிஸ்தான் வானொலி வெளியிட்டது. பாகிஸ்தான் வரும் பான் கீ மூன், பிரதமர் நவாஸ் ஷெரீப், அதிபர் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசுவார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பான் கீ மூன் உரை நிகழ்த்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் என்று வானொலியில் செய்தி வெளியாகி உள்ளது.