ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே இருசமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து 5 பஸ்கள் கல் வீசி உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மேல்சாமல்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (எ) ஜெயசந்திரன் (35). கேபிள் டிவி ஆபரேட்டர். இவர், நேற்று மாலை, சாமல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனியப்பன் என்பவர், தன்னை தாக்கி மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்தார். அதேபோல, முனியப்பனும் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மனைவியிடம் ஜெயசந்திரன் ஆபாசமாக பேசி தொல்லை கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு சுமார் 8 மணியளவில், பெங்களூரில் இருந்து வந்த அரசு பஸ்சை, 15 பேர் கொண்ட மர்ம கும்பல் கல்வீசி தாக்கியது. சிறிது நேரத்தில், சாமல்பட்டியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் மேலும் 4 அரசு பஸ்களின் பின்பக்க கண்ணாடிகளை மர்ம கும்பல் கல்வீசி தாக்கினர்.
இதையறிந்த மாவட்ட எஸ்பி செந்தில்குமார், ஊத்தங்கரை டிஎஸ்பி கண்ணப்பன், கிருஷ்ணகிரி ஆர்டிஓ மனோகரன், ஊத்தங்கரை தாசில்தார் சக்திவடிவேல் ஆகியோர் சாமல்பட்டிக்கு விரைந்தனர். ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், முனியப்பன் மற்றும் சிவாஜி மீது வழக்குப்பதிந்து முனியப்பனை போலீசார் கைது செய்தனர். இதே போல், முனியப்பன் மனைவி மணி கொடுத்த புகாரின் பேரில் ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.அரசு பஸ்கள் உடைத்ததாக 22 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாமல்பட்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.