சென்னை:தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், சுதந்திர தின விழா பாதுகாப்புக்கு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. டெல்லி செங்கோட்டையை குண்டு வைத்து தகர்க்க தீவிரவாதி ஹபீஸ் சயீது தனது கூட்டாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஹபீஸ் சயிது, மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வருபவன். தற்போது, ‘ஜமா அத் துவா’ என்ற தீவிரவாத அமைப்பை நடத்தி வருகிறான். இந்தியாவில் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்திட தனது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு ஹபீஸ் உத்தரவிட்டு இருப்பதாக மத்திய அரசின் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி உளவுத்துறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் தாக்குதல் நடத்துவதாக ரகசிய தகவலை கசியவிட்டு மற்ற முக்கிய நகரங்களை தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்பதால், சுதந்திர தினத்தன்று அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவருவதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சென்னை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க எஸ்.பி.க்களுக்கு டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் தலைமையிடத்திற்கு தகவல் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விடுப்புகளில் சென்றவர்களும் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகளிலும், முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் அனைத்து நுழைவு வாயில்களிலும் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் தற்காலிக தடுப்புகள் அமைத்து வாகனங்களை தீவிரமாக சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களிலும் கண்காணிக்கப்படுகிறது. இரவு ரோந்தும் மேற்கொள்ளப்படுகிறது.
ரயில் நிலையங்கள், பஸ்நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பூங்கா, மெரினா உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வழிப்பாட்டு தலங்களை போலீசார் தங்களது கண்காணிப்பில் கொண்டுவருவார்கள். முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்படுவார்கள்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் உடமைகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்த அதை எதிர்கொள்ள கமோண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.