மேற்கு வங்கத்தில் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ்-சிபிஎம் போட்டி
கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என சபாநாயகருக்கு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் முகமது சோரப் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 40 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியில் பங்கு பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 61 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 39 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸட் கட்சியை சேர்ந்த சூர்யா கந்தா மிஸ்ராவுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு எதிர்த்து சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திரிணாமுல் விலகியது. இதை தொடர்ந்து மம்தா அமைச்சரவையிலிருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் முகமது சோரப் சபாநாயகர் பீமன் பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கும் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.