அசாமை இரண்டாக பிரிக்க முதல்வர் கோகய் எதிர்ப்பு
கவுகாத்தி:அசாம் மாநிலத்தை பிரித்து போடோலேண்ட் தனி மாநிலம் உருவாக்க போராட்டங்கள் வலுத்து வரும் வேளையில் மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டேன் என முதல்வர் தருண் கோகய் அறிவித்துள்ளார்.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க கடந்த வாரம் காங்கிரஸ் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் புதிய மாநில கோரிக்கை வலுத்து வருகிறது. மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மலைபகுதியை கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலமாக பிரிக்கவும், அசாமில் போடோ மக்கள் அதிகம் வசிக்கும் பிராந்தியதை போடோலேண்ட மாநிலமாக பிரிக்கவும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கூர்காலாந்து உருவாக்க மே.வங்க முதல்வர் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த பிராந்தியத்தில் வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதே போல் போடோலேண்ட் தனி மாநிலத்துக்கு அசாம் முதல்வர் தருண் கோகய் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். திட்டபோரில் நேற்று மாலை நடைபெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் போடோலேண்ட் பிரச்னை குறித்து கோகய் பேசியதாவது:
அசாமை இரண்டாக பிரிக்க மாட்டேன். நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் மற்றவர்கள் நம்மை பிரிக்க அச்சப்படுவார்கள். நாம் பல இனமாக பிரிந்து இருக்கலாம். ஆனால் அசாமியர்கள் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு வாழ வேண்டும். வன்முறைகளால் பிரச்னைக்கு தீர்வு காணமுடியாது. உல்பா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத குழுக்களும் இப்போது பேச்சு வார்த்தைக்கு முன்வந்துள்ளது. பேச்சு வார்த்தை மூலமாகவே பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கோகய் பேசினார்.