நீலகிரி அருகே இன்று அதிகாலை காட்டு யானைகள் இடித்து வீடு தரைமட்டம்
கூடலூர்:நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து ஒரு வீட்டை இடித்து தரைமட்டமாக்கின. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே லாரன்ஸ் டன் எண்&4 பகுதியை சேர்ந்தவர்கள் ராஜன், ஜெய்பிரசாத். இவர்கள் அங்குள்ள வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். தோட்டம் நிறைந்த பகுதி என்பதால் இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு குட்டியுடன் 6 யானைகள் லாரன்ஸ்டன் பகுதியில் நுழைந்தன. அங்குள்ள தோட்டத்தை சேதப்படுத்தி விட்டு வீடுகளை நோக்கி வந்தன. ராஜன், ஜெய்பிரசாத் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டு ஜன்னல் அருகே வந்து நின்ற யானைகள் பிளிறியது.
சத்தம் கேட்டு எழுந்த இருவரும் வீட்டிற்குள் பதுங்கி யானைகளின் கவனம் திசை திரும்பியபோது, வீட்டிலிருந்து தப்பியோடினர். இதற்கிடையில் வீடுகளை சுற்றி நின்று கொண்டிருந்த யானைகள் இடித்து மோதியதில் வீடு தரைமட்டமாகியது. பின்னர், அடுத்தடுத்து உள்ள மூன்று வீடுகளின் முன்பு நடமாடியது. மக்கள் பீதியுடன் வீட்டிற்குள் முடங்கியிருந்தனர். காலை 5 மணியளவில் யானைகள் அங்கிருந்து அகன்று வனப்பகுதிக்குள் சென்றது. வனத்துறை அதிகாரிகள் தரைமட்டமான வீடு மற்றும் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு யானைகள் இப்பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.